வாகனங்களை பயன்படுத்தும்போது சின்ன சின்ன மெக்கானிக் வேலைகளை கைவசம் வைத்திருப்பது அவசியம். இல்லையென்றால், சில சமயம் நடுரோட்டில் படாத அவஸ்தை பட வேண்டியிருக்கும்.
அந்த வகையில், தற்போது ஹோண்டா ஆக்டிவா முதல் பல்சர் 200 வரை பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் ட்யூப்லெஸ் டயருடன்தான் வருகின்றன.
ட்யூப்லெஸ் டயர்கள் எளிதில் பஞ்சராகாது என்றாலும், பஞ்சரானாலும் பயப்பட வேண்டியதில்லை. ஏனெனில், ட்யூப்லெஸ் டயர்களில் பஞ்சர் போடுவது எளிதான விஷயம்தான். அதற்கான வழிமுறையை பார்க்கலாம்.
முதலில் ட்யூப்லெஸ் டயருக்கான பஞ்சர் கிட்டை வாங்கிக்கொள்ள வேண்டும். அனைத்து ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடைகளிலும் தற்போது இது 200 ரூபாயிலிருந்து கிடைக்கிறது. இந்த கிட்டில் கோணூசி போன்ற டூல் ஒன்றும் ரப்பர் நூலும் இருக்கும்.
டயர் பஞ்சராகும் சமயத்தில் டயரில் குத்தியிருக்கும் ஆணியை கொரடால் பிடுங்கி விடுங்கள். பின்னர், ஆணி குத்திய இடத்தில் உள்ள ஓட்டையை அந்த டூலால் பெரிதாக்குங்கள்.
தேவையான அளவு ரப்பர் நூலை கத்தரித்துக்கொண்டு டூலின் நுனியில் இருக்கும் ஓட்டையில் துணிதைக்கும் ஊசியில் நூலை கோர்ப்பது போன்று கோர்த்து சரிசமமாக இழுத்துக்கொள்ளுங்கள்.
பஞ்சரான ஓட்டையில் தற்போது நூலை போதுமான அளவு திணித்து விட்டு டயருக்கு வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் நூலை கத்தரித்து விடுங்கள். அவ்வளவுதான், இப்போது நீங்கள் வண்டியை கிளப்பி செல்லலாம். டயர் உருளும்போது ரப்பர் நூல் டயருடன் சேர்ந்து ஒட்டிக்கொள்ளும்.
ட்யூப்லெஸ் டயரில் பஞ்சரானாலும் காற்று உடனே இறங்காது என்பதால், இருக்கும் காற்றை வைத்துக்கொண்டு வண்டியை ஓட்டிச் செல்லமுடியும்.
No comments:
Post a Comment